June 11, 2012

தமிழ்க்குடில் ஆண்டுவிழா - ஒரு பார்வை

தமிழ்க்குடில் அறக்கட்டளை மே மாதம் 21, 2012 அன்று பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து(பதிவு எண் 18 IV 12) நமது குடிலின் முதலாம் ஆண்டு விழா 2012, ஜூன் மாதம் 10ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது..
விழாவினை தோழி.சீதாலட்சுமி அவர்களும், தோழர்.ஸ்டாலின் ஜெயச்சந்திரன் அவர்களும் தங்கள் கனிவான குரலில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்
உயர்திரு.ஐயா.சிலம்பொலி செல்லப்பன் அவர்களும், மற்ற சிறப்பு விருந்தினர்களும் குத்துவிளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து காந்தி ஆசிரமத்தை சேர்ந்த குழந்தைகள் தம் மனதை மயக்கும் மழலைக் குரலினால் இறைவணக்கமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாட விழா உற்சாகம் அடையத் துவங்கியது.
குடிலின் நிர்வாகி காயத்ரி வைத்தியநாதன் வரவேற்புரை வழங்கினார்.
விழாத்தலைவர், மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நமது குடிலைச் சேர்ந்த சகோதரர்.அன்புசிவன் அவர்கள் பொன்னாடைப் போர்த்தினார்கள்.
திக்கெட்டும் அதிர சிலம்பு இசைத்து தமிழுக்கு சிறப்பு செய்து, வாழுங்காலம் யாவும் விருதுகளிலும், விழாக்களிலும் தமிழைத் தாங்கி நிற்கும் திருவுருவமாய், சிரித்துப் பேசும் சிலப்பதிகாரமாய், முரசென முழங்கி தமிழ் வளர்த்த உயர்தகை பெரியோர், உத்தமர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் தமிழைக் கரமேந்தி, சிந்தனை கற்பூரம் ஏற்றி, தமிழர்களின் வாழ்வு சிறக்க வாழ்த்துரை வழங்கி நமையெல்லாம் மகிழ்விக்க...வார்த்தையில் கூறவிடமுடியாத தருணமது.
தமிழின் தேடலில் தரணியில் இலக்கியம் பேசி, சுவைமிகு சொற்கவி படைத்து, புகுமிடம் எல்லாம் தமிழின் புகழ் பரப்பி, சிந்தனை முழுக்க தமிழ்த்தேன் சிந்தி, தமிழென்றால் முந்தி நின்று சேவை செய்யும் தூயமனம் கொண்ட செங்கரும்பு சுவைத் ததும்பும் சோழத்து கவிச்சோலை, நட்புக்கு இலக்கணம் காட்டி இணைப்பு பெயர் சூட்டி, தமிழுக்கு தொண்டாற்றும் நற்கவிஞர் திரு.அறிவுமதி அவர்கள் தன் பெயருக்கேற்றவாறு அறிவார்ந்த கருத்துக்கள் செறிந்த சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்.
 
மனித இனத்தின் மாண்புகள் அனைத்தும் ஒருங்கே பெற்ற தமிழினம் தன்னிலை மறந்து தடுமாறும் இவ்வேளையில், தமிழர்களையும், தமிழையும் இணைக்கும் வகையில், செயல்வடிவில் அடி எடுத்து வைக்கும் முதல் முயற்சியாக, அறக்கட்டளை தொடங்கி, தமிழ் மக்களுக்கு தொண்டு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த பொன்னான தருணத்தில் அறக்கட்டளை பற்றிய விளக்கவுரையை தமிழ்க்குடில் நிர்வாகி திருமதி.அனிதாராஜ் அவர்கள் குடிலின் நோக்கம்,செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.
செந்தமிழ் சிறக்க சொற்றமிழ் கவிமழைப் பொழிந்த கவிப்பேராற்றல் பொருந்திய நற்றமிழ் நாவில் நடனம் புரியும் சொற்கவிச்சோலை கவித்தேன் சிந்தி நம்மை களிப்படைய செய்ய, தமிழாராய் பெருகி, தமிழாய் உருகி, சுவையாய் தமிழை சுவைக்கச்செய்யும் வண்ணம் விழாத்தலைவர் உயர்திரு ஐயா.புலமை பித்தன் அவர்கள் எழுச்சிமிகு உரையாற்றி நமையெல்லாம் தமிழின் அமுத மழையில் நனைய வைத்தார்.
பூவிடைப் புகுந்து மகரந்தம் சுவைத்து மயங்கும் வண்டினம் போல், தமிழின்பால் புகுந்து அறிவால் மயங்கும் அற்புத ஆய்வாளர், தமிழுக்கு தன் குரலில் தனிக்குறள் காண விழையும் கவிதை சிற்பி, கருத்தில் கூட காந்தம் வைத்து இழுக்கும் தமிழ்க்காந்தம் தோழர் திரு,கவிஞர்.இரவா.கபிலன் அவர்கள் சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்.
சிந்தனையில் கேள்வித்தேள் சுமந்து சென்றவிடமெங்கும் தமிழைக் கொட்டி, உடன் நின்றோரின் சிந்தனையில் தமிழை ஏற்றிய பண்பாளர், தமிழ் சுமந்து வாழ்க்கை சுவைத்த போராளி, தமிழருக்கும், தமிழுக்கும் நன்மை தேடித் தேடியே ஓயாது உழைக்கும் செம்மல், திரு.முருகு.இராசாங்கம் தமிழர் நாடு இதழின் ஆசிரியர் அவர்கள் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் சிறப்பு உரையாற்றினார்.
இரசிக்கவும், ருசிக்கவும் தமிழ் தந்த விருந்தில் திளைத்து மகிழ்ந்த நம்மை, அறுசுவை விருந்தளித்து மகிழ்வித்தார் நமது குடிலின் சகோதரர்.திரு.இளையபாரதி.
தெவிட்டாத தெள்ளமுத சுவை தந்து, அள்ளக்குறையா அறுசுவை உணர்வூட்டி, ஆன்றோர் அவையிலும், காடுகழனியிலும் தமிழர் நாவில் தழைத்தோங்கும் தங்கத்தமிழை சிறப்பிக்க, தமிழ்க்குடில் கவிமுத்துக்கள் கோர்த்த கவிதை மாலைகள் சபையை அலங்கரிக்க கவியரங்கம் இனிதே அரங்கேறியது. கவியரங்கத்திற்கு தலைமை ஏற்று, நமது கவிஞர்களை வழிநடத்தினார் புதுவை தந்த மரபுக்கவி, மாண்புற தமிழ் சிறக்க தன்னை தமிழுக்கு தந்து, அன்னை தமிழுக்கு அழகு சேர்க்கும் அரும்பணியில் இன்றும் ஈடுபடும் கவிஞர்.திரு.இராஜ.தியாகராஜன் அவர்கள்..
தமிழ்க்குடில் அறக்கட்டளை அறிமுகம்: தமிழ்க்குடில் அறக்கட்டளையின் மூலம் மேடையில் 20 மாணாக்கர்களுக்கு உயர்திரு.ஐயா.சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் பொற்கரங்களினால் கல்விக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டது.
சொற்போர் நிகழ்த்த சிறந்த இடம் பட்டிமன்றம். கருத்துக்கள் மோதி மோதி சிந்தனைகள் சிதறும் போர்க்களம் இந்த பட்டிமன்றங்கள். தமிழரின் அறிவு முதிர்ச்சி வெளிப்படும் சுவைமிகும் சொற்சோலையாக விளங்கும் தமிழ்க்களம் நம் தமிழ்க்குடிலிலும் இடம்பிடித்திருந்தது. திருக்குறளில் விஞ்சியிருப்பது அறமா..? பொருளா..? இன்பமா..? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தைத் தலைமை ஏற்று நிகழ்ச்சியை சிறப்பு செய்தார் திரு.சிலம்பொலி செல்லப்பன் அவர்கள்.
விழாவிற்கு உதவியவர்களை கௌரவித்தல்: தமிழ்க்குடிலின் சிறப்பான விழா அமைப்புக்கு தொடர்ந்து தங்கள் பங்களிப்பை தந்து உதவிய அன்பு உள்ளங்களை தமிழ்க்குடில் பாராட்டி கௌரவித்தது.
 நன்றியுரை: தமிழ்க்குடிலின் நிர்வாகி தோழர்.தமிழ்க்காதலன் அவர்கள் தமிழ்க்குடிலின் விழாவினை சிறப்பிக்க வந்திருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டினார்கள்.
விழாவிற்கு வந்து சிறப்பித்து மகிழ்வித்த அனைத்து தோழமைகளுக்கும் நிர்வாகம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. _/\_
அன்புடன் தமிழ்க்குடில்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!